மருந்து கடை உரிமையாளர் வெட்டிக்கொலை

மருந்து கடை உரிமையாளர் வெட்டிக்கொலை
மருந்து கடை உரிமையாளர் வெட்டிக்கொலை
செங்கல்பட்டு அருகே மருந்து கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

செங்கல்பட்டு மாவட்டம், மண்ணிவாக்கம், ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார், 45. இவர், ஓட்டேரியில் மருந்து கடை நடத்தி வந்தார்.நேற்று முன்தினம் இரவு 10:15 மணிக்கு, மருந்து கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார்.ஓட்டேரி அரசு பள்ளி அருகே சென்ற போது, மர்ம நபர்கள், வினோத்குமாரை வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஓட்டேரி போலீசார், வினோத்குமார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:கடந்த 2020ம் ஆண்டு,அப்பகுதியை சேர்ந்த ரவுடி சிலம்பரசன் என்பவர், தன் கூட்டாளிகளுடன் வினோத்குமாரின் மருந்து கடைக்கு வந்து, மாமூல் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.அது மட்டுமின்றி, அவரது மொபைல் போனுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக, வினோத்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதன் அடிப்படையில், ரவுடி சிலம்பரசனை ஓட்டேரி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். எனவே, ரவுடி சிலம்பரசன் துாண்டுதலின் பேரில், அவரது நண்பர்கள் வினோத்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.மருந்து கடை உரிமையாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ரவுடி கும்பலை கைது செய்யக்கோரியும், தமிழ்நாடு வியாபாரிகள் பேரவை சார்பில், மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தலைமையில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகில், நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது.

அதேபோல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில தலைவர் விக்ரமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தொடர்ந்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, ஒரு வாரத்திற்குள் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால், தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags

Next Story