மருத்துவ மாணவர் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் நேரில் ஆறுதல்
அமைச்சர் நேரில் ஆறுதல்
நாமக்கலை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவர் ஜார்க்கண்ட்டில் உயிரிழப்பு : அமைச்சர் மதிவேந்தன் நேரில் ஆறுதல் நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்ப்பட்டி பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது மகன் மதன்குமார். இவர் முதுகலை மருத்துவப்படிப்பிற்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவக்கல்லூரியில் தடயவியல் துறையில் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தார்.
இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5.40 மணியளவில் மருத்துவ கல்லூரி விடுதியில் 4வது தளத்தில் இருந்து மர்மமான முறையில் தீயில் எரிந்தபடி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தகவலறிந்த மாணவர் மதன்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் மாணவர் உடலை இன்று சொந்த வேலகவுண்டன்ப்பட்டிக்கு வந்தனர். அங்கு அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.
பின்னர் நாமக்கல் மின்மயானத்தில் உடல் தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. மின்மயானத்தில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா ஆகியோர் மருத்துவ மாணவர் மதன்குமார் உடலுக்கு மரியாதை செலுத்தினர். அப்போது, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் ஆட்சியரிடம் மதன்குமார் மரணத்திற்கு உரிய விசாரணை நடத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டும், மதன்குமாரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.