தாட்கோ மூலம் மருத்துவம் சார்ந்த பயிற்சி
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கிவருகிறது.
அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு அடிப்படை ஆயுர்வேதமசாஜ் பயிற்சி, அடிப்படை டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை செவிலியர் பயிற்சி, அடிப்படை பஞ்சகர்மா தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை மூத்தபராமரிப்பு பயிற்சி, அடிப்படை எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி, அடிப்படை யோகா மற்றும் ஆரோக்கிய பயிற்சி என பல்வேறு மருத்துவம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை முன்னணி பயிற்சி நிறுவனங்கள் முலம் வழங்கி வேலைவாய்ப்பு பெற்றுதர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த 18 முதல் 35 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கவேண்டும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.12,000/- முதல் ரூ.20,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியினை பெற கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மாணாக்கர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.