மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண சாப்பாடு: 1 லட்ச பேருக்கு விருந்து

சாப்பாடு செய்த ஊழியர்கள்
மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கியது. மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.19ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை காண வந்துள்ளனர். இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கல்யாண வைபவத்தின் போது பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதி மேல் நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டும் டிரஸ்ட் சார்பில் ஒரு லட்சத்திற்கு அதிகமானோருக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பொது மக்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று மாப்பிள்ளை அழைப்பிற்காக சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு விருந்து பரிமாறப்பட்டது.
தொடர்ந்து இன்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை முதல் மாலை வரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமணத்தை முன்னிட்டு காலை உணவாக கிச்சடி, வெண்பொங்கல், கேசரி, வடை என வைத்து பரிமாறப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் முடிந்த பிறகு 10 மணிக்கு மேல் சாம்பார் சாதம், வெஜ் பிரியாணி,
தயிர் சாதம் தயார் செய்யப்பட்டு பரிமாறப்படுகிறது. அதற்கான பணிகளில் நேற்று மாலை மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிரம்மாண்டமான முறையில் சுமார் 6000 கிலோவிற்கு அதிகமான அரிசி, 6 டன் காய்கறிகள், மற்றும் சமையல் பொருட்கள் பயன்படுத்தி,
300க்கும் அதிகமான பெண்கள் சமையல் பணிக்கான காய்கறிகளை வெட்டும் பணிக்காக மாத்திரமும், 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள், பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
