சேலத்தில் சீரான குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு கூட்டம்
சேலத்தில் சீரான குடிநீர் வினியோகம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
சீரான குடிநீர் வினியோகம் குறித்து கலெக்டர் பிருந்தாதேவி ஆலோசனை நடத்தினார். சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சீரான குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசியதாவது:- சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,475 ஊரக குடியிருப்புகளுக்கு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
சீரான குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நீரேற்றும் மின் மோட்டார்களை நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும். மேலும் அந்த பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். குடிநீர் வினியோகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கண்காணிக்க மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களை ஒருங்கிணைத்து பிரத்தியேக வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
குடிநீர் வினியோகம் தொடர்பாக பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் அல்லது 0427-2450498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.