மேல்மா சிப்காட் : விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
காத்திருப்பு போராட்டம்
செய்யாறு அடுத்த மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு மேல்மா, மணிப்புரம், தேத்துறை, குரும்பூர், நர்மபள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், வீரம்பாக்கம், காட்டுகுடிசை ஆகிய 11 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3174 ஏக்கர் விளை நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மேல்மா சிப்காட் விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று 11 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் 126 நாட்களாக காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளை கைது செய்து ஏழு விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சி பல்வேறு தலைவர்கள் விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் விவசாயிகள் 137 வது நாளாக மீண்டும் இரண்டாம் கட்டமாக காத்திருப்பு போராட்டம் நடத்துவதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்த நிலையில் அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் தலைமையில் பாமக தேமுதிக பாஜக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் மேல்மா சிப்காட் விரிவாக திட்டத்திற்கு விளை நிலங்களை கையகப்படுத்தி வரும் திமுக அரசை கண்டித்து மேல்மா கூட்டுச்சாலையில் பந்தல் அமைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்ட பந்தலை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு விளை நிலங்களை கையகப்படுத்தி வரும் அரசை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.