மெல்வின் மெட்ரோ அரிமா சங்க புதிய இயக்குனர் குழு பொறுப்பேற்பு
நாமக்கல் மெல்வின் மெட்ரோ அரிமா சங்கத்தின் 2024-25ம் ஆண்டிற்கான புதிய இயக்குனர் குழு பொறுப்பேற்பு விழா நாமக்கல் நளா ஹோட்டலில் நடைபெற்றது. புதிய இயக்குனர் குழு தலைவராக வீரக்குமார், நிர்வாக செயலாளராக சுதாகர், சேவை செயலாளராக ஞானக்குமார், பொருளாளராக முருகேசன் ஆகியோர் பொறுப்பேற்றனர். புதிய இயக்குனர் குழுவினருக்கு கூட்டு மாவட்ட GST ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அரிமா மாவட்ட ஆளுநர் தமிழ்மணி கடந்த ஆண்டு நிர்வாகிகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார். அரிமா முன்னாள் மாவட்ட ஆளுநர் சந்திரசேகரன் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். சேவை திட்டங்களை துவக்கி வைத்து முதலாம் துணை மாவட்ட ஆளுநர் விஸ்வநாதன் மற்றும் முதலாம் துணை மாவட்ட ஆளுநர் பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். கனவு மெய்ப்பட ஆண்டின் ஆளுநர் திட்டங்களை முன்னாள் மாவட்ட ஆளுநர் மோகன் துவக்கி வைத்தார்.தொடர்ந்து அரிமாக்கள் ரவிச்சந்திரன், தேவராஜ், மோகன், குருநாதன், மேகநாதன் மற்றும் முன்னாள் தலைவர்கள், அமைச்சரவை உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், அரிமா சங்கத்துடன் இணைந்து சமூக பணியாற்ற பேரமைப்பு விரும்புவதாகவும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் நெகிழியில்லா நாமக்கல் உருவாகிட அரிமா சங்கத்துடன் இணைந்து விரைவில் மாபெரும் பேரணி நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். விழாவில் பல்வேறு அரிமா சங்கங்களை சார்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.