மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு: மாணவிகளுக்கு காமிக்ஸ் புத்தகங்கள்

மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மென்ஸ்ட்ரூபீடியா காமிக்ஸ் புத்தகங்கள் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.
மென்ஸ்ட்ரூபீடியா காமிக் என்பது இளம் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு சிறிய காமிக் புத்தகம். ஒவ்வொரு மாணவியர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய வழிகாட்டி கையேடு, குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் பருவ வயது பெண்களுக்கு ஆரோக்கியமான மாதவிடாய் குறித்து விளக்கிக் கூறும் ஓர் நட்பான வழிகாட்டி. மேலும், மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்க்கவும் பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கையேடு பயன்படும். மேலும், இப்புத்தகங்களை நூலகத்தில் வைத்து பராமரித்து மாணவியர்களுக்கு படிப்பதற்கு வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மென்ஸ்ட்ரூபீடியா காமிக் புத்தகங்கள் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு 25 ஆயிரம் புத்தகங்கங்கள் வழங்கப்பட்டது. மாதவிடாய் குறித்த நேர்மறையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மென்ஸ்ட்ரூபீடியா காமிக் கையேடுகளை பள்ளி மாணவியர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.