மனநலம் பாதித்த நேபாள பெண் சிகிச்சைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு
குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நேபாள பெண் மூனா
கன்னியாகுமரி அருகே மருந்துவாழ் மலை அடிவாரத்தில் தனியார் மனநல காப்பகம் அமைந்துள்ளது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை மற்றும் யோகா பயிற்சிகள் வழங்கி அவர்களை பராமரித்து வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கன்னியாகுமரி மாதவபுரம் பகுதியில் சுமார் 37 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துள்ளார். அவரை காப்பகத்தை சேர்ந்தவர்கள் மீட்டு அவருக்கு மனநல சிகிச்சை அளித்தனர். பின்னர் அவருக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்ந்து அவர் குணமடைந்துள்ளார்.
இதை அடுத்து அவரது பெயர் மூனா என்றும் சொந்த ஊர் நேபாளம் என்றும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து காப்பக உரிமையாளர்கள் தமிழக போலீஸ் உதவியுடன் நேபாள நாட்டு போலீசாரை தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அந்தப் பெண்ணின் சகோதரர்கள் ரமேஷ் விஷ்வதரங்கா, மற்றும் ரஜிபில்வ தர்மா ஆகியோர் நேபாள நாட்டிலிருந்து கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர்.
பின்னர் தனது சகோதரியை அவர்கள் அழைத்துச் சென்றனர். கடையில் பொருள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து சென்றவர் திடீரென காணாமல் போனதாகவும் இதுகுறித்து நேபாள நாட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தனது சகோதரியை தேடி வந்த நிலையில் அவர் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளதாக அவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.