மேட்டுப்பாளையம் : குடிநீர் விநியோகிக்ககோரி கிராம மக்கள் சாலை மறியல்
சாலை மறியல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த ஆலங்குடி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் விரிவாக்கம் செய்யப்படவில்லை என பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த போது மக்கள் நேற்று மாலை 6 மணி முதல் சிறுமுகை - சத்தி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கிராமத்துக்கு திருப்பூர் இரண்டாம் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தண்ணீர் விநியோகிக்க வேண்டுமென கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் வருவாய் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் மாவட்ட ஆட்சியர் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறி விடிய விடிய சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் காலை வேளையில் வெயிலின் தாக்கம் காரணமாக பந்தல் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தனர். தன்னார்வலர்கள் சிலர் மறியலில் ஈடுபட்டவர்களுக்கு காலை உணவு வழங்கினர்.
பொதுமக்களின் மறியல் காரணமாக சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டதால் இப்பகுதியில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது. தொடர்ந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு குடிநீர் வாரிய உதவி பொறியாளர் சித்ரா தலைமையிலான அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.அப்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆலங்கும்பு கிராமத்துக்கு 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.