மதுரை அருகே நடுகல் சிற்பம் - தமிழக தொல்லியல் அலுவலர்கள் கண்டுபிடிப்பு
நடுகல் சிற்பம்
தமிழக தொழில் துறை சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம். நடுகோட்டை கிராம மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் இணை இயக்குநர் முனைவர் இரா. சிவானந்தம் தலைமையில், மதுரை மாவட்ட தொல்லியல் அலுவலர் மா. இரமேஷ் மற்றும் தொல்லியல் அலுவலர் ரா. அஜய் குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வினை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இப்பகுதியினைச் சுற்றி மேற்கொண்ட களஆய்வின் பொழுது நடுக்கோட்டை கிராமத்தில் இருந்து, வடமேற்கே சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் சுமார் 500-ஆண்டுகளுக்கு முற்பட்ட விஜயநகர் காலத்தினை சேர்ந்த அரிய வகை நடுகல் சிற்பமானது குழுவினரால் கண்டறியப்பட்டது.
இந்நடுகல்லானது வயல்வெளிகளுக்கு நடுவில் சற்று மேட்டுப்பாங்கான இடத்தில், புதர்மண்டிய நிலையில் கண்டறியப்பட்டது. கருங்கல்லினால் ஆன பலகை கல்லில் செய்யப்பட்ட இந்நடுகல்லானது சுமார் 5 1/2 அடி நீளமும் 4 அடி அகலமும் 1 அடி தடிமனும் கொண்டுள்ளது. இச்சிற்பத்தில், மரணமடைந்த வீரன் முன்னங்கால்களை தூக்கிய நிலையில் உள்ள குதிரையின் மீது அமர்ந்து செல்வதுபோல் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இவ்வீரனின் மேல்நோக்கி உயர்த்திய வலது கையானது கூர்மையான வாளினை ஏந்திய வகையில் காட்டப்பட்டுள்ளது. இடது கையானது குதிரையின் கயிற்றினை பிடித்த வகையில் செதுக்கப்பட்டுள்ளது.
விஜயநகர காலத்தைச் சார்ந்த சிற்பதிற்கே உரிய முறுக்கிய மீசை, பக்கவாட்டுக் கொண்டை, தலையணி, காதணிகளுடன் மார்பில் சன்னவீரம். இடையில் குறுவாளுடன் மிக கம்பீரமாக இந்நடுகல் காட்டப்பட்டுள்ளது. பறக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ள இவ்வீரனின் மேலாடை மற்றும் முன்னங்கால்களை தூக்கிய நிலையில் காட்டப்பட்டுள்ள குதிரையின் சிற்பம், இந்நடுகல் வீரன் குதிரையை இயக்கும் நிலையில் உள்ளது. நடுகல் வீரனின் இடது புறத்தில் அவனது மனைவி கைக்கூப்பியவாறு நின்ற நிலையில் தலையில் கொண்டையுடனும் கழுத்தில் அணிகலன்களும் அணிசெய்கின்றன. இச்சிற்பத்தின் இடது புறம். ஒரு ஆண் உருவமானது நடுகல் வீரனுக்கு குடைப் பிடித்தவாறு காட்டப்பட்டுள்ளது. மேலும் குதிரையின் கீழுள்ள மூன்று ஆண் உருவங்கள் கையில் வாளுடனும், குடுவையுடனும், செதுக்கப்பட்டுள்ளன. இச்சிற்ப தொகுப்பானது வளைவுகளுடன் கூடிய தோரணத்தின் கீழ் மிக நேர்த்தியாகக் காட்டப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.