மினி ஆட்டோ - கார் மோதல் : தம்பதி உயிரிழப்பு
புதுக்கோட்டை அடுத்த சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் கௌதம் கார்த்திக். இவர் சிறிய ரக சரக்கு வாகனத்தில் தண்ணீர் டேங்கில் தண்ணீர் நிரப்பி தினசரி அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்று வருவது வழக்கம். அதன்படி வழக்கம்போல் இன்று சிறிய ரக சரக்கு வாகனத்தில் தண்ணீர் விற்பனைக்காக கௌதம் கார்த்திக் சத்தியமங்கலம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலத்திலிருந்து திருச்சி வழியாக திருவண்ணாமலைக்கு சுற்றுலா சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு வாகனங்களும் நொறுங்கிய நிலையில் வாகன இடர்பாடுகளுக்குள் காரில் சென்ற மூன்று பேரும் அதேபோல் சிறிய ரக சரக்கு வாகனத்தில் சென்ற கௌதம் கார்த்திக்கும் சிக்கிய நிலையில் அவர்களை காவல்துறையினரும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் கடப்பாரை கம்பி உள்ளிட்டவற்றைக் கொண்டு நீண்ட நேரம் போராடி மீட்டனர். இந்நிலையில் அதில் ஆர்எஸ் மங்கலத்தைச் சேர்ந்த கோவிந்தன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது மனைவி உமாமகேஸ்வரி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்ற போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உமாமகேஸ்வரியும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்த இவர்களது மகன் பிரவீன்சுந்தரும் காயமடைந்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிறிய ரக சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற கௌதம் கார்த்திக்-ஐ நீண்ட நேரத்திற்கு பிறகு காவல்துறையினர் மீட்ட நிலையில் அவரும் படுகாயமடைந்திருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விபத்து குறித்து வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த கோவிந்தன், உமாமகேஸ்வரி தம்பதியின் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனை கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தனது மகனுடன் காரில் திருவண்ணாமலைக்கு சுற்றுலா சென்ற தாய் தந்தை ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.