மினி பஸ் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து!
விபத்து
ஒடுகத்தூர் அருகே வேலை ஆட்களை ஏற்றிச் சென்ற மினி பஸ் நடு ரோட்டில் கவிழ்ந்ததில் 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒடுகத்தூர், குருவராஜபாளையம், பள்ளிகொண்டா, ஒலகாசி, ஒதியத்தூர், அகரம் போன்ற பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தினமும் நிறுவனத்துக்கு சொந்தமான மினி பஸ்சில் அழைத்துச்செல்லப்பட்டு பணி முடிந்ததும் இருப்பிடங்களுக்கு கொண்டு வந்து விடப்படுகின்றனர். அதன்படி பணியில் ஈடுபட்டிருந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி முடிந்ததும் மினி பஸ்சில் தங்களது ஊர்களுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். ஒடுகத்தூரை அடுத்த கரடிகுடி கிராமம் அருகே சாலை வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.அப்போது பள்ளத்தில் இறங்கி ஏறியபோது சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த பெண்கள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 4 பேர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த விபத்தால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர், போலீசார் சாலையில் கவிழ்ந்த மினிபஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால், சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story