பத்மநாபபுரம் தொகுதியில்  மினி விளையாட்டு அரங்கம் 

பத்மநாபபுரம் தொகுதியில்  மினி விளையாட்டு அரங்கம் 
விளையாட்டு மைதானத்தை ஆய்வு செய்த அமைச்சர்
கன்னியாகுமரி மாவட்டம், கல்லடிமாமூடு பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் கட்டப்படும் பகுதியினை அமைச்சர் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட கல்லடிமாமூடு பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் கட்டப்படும் பகுதியினை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,

குமரி மாவட்டத்திற்குட்பட்ட கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் முதற்கட்டமாக திருவட்டார் வட்டம், கல்லடிமாமூடு பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4.83 ஏக்கர் நிலத்தினை தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து ரூ.3 கோடி மதிப்பில் புதிய மினி விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான பணியினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கடந்த 19.10.2023 அன்று துவக்கி வைத்தார்கள்.

மேலும் மினி விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தினை சீர்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட துறை அலுவலர்களுடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேல்குறிப்பிட்ட நிலத்தினை சமப்படுத்தி பணிகளை விரைந்து மேற்கொண்டிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.

ஆய்வில் பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் தமிழரசி, மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ராஜேஷ், திருவட்டார் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் ஜெகநாதன், திருவட்டார் வட்டாட்சியர், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story