நெல் கொள்முதலை துவக்கி வைத்த அமைச்சர் அன்பரசன்

காஞ்சிபுரம் அருகே மேல்பேரமநல்லூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் அன்பரசன் நெல் கொள்முதலை துவக்கி வைத்தார்.

விவசாய மாவட்டம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் ஏரி, தென்னேரி , தாமல் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளும் சிறு குறு ஏரிகளும் மாவட்ட முழுவதும் நிறைந்துள்ளது.இந்நிலையில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய 5 தாலுகாக்களில் இந்த நடப்பு பருவத்தில் 1.2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெல் சமீபத்தில் அறுவடைக்கு தயாராக உள்ளது இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விற்பனை செய்ய தயாராகி வருகின்றனர்.இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் ஆகிய மூன்று தாலுகாக்களை முதல் கட்டமாக 12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் தாலுகாவில் கூரம், தாமல் என இரு பகுதிகளிலும், வாலாஜாபாத் தாலுகாவில் மேல்பேரமநல்லூர், விச்சந்தாங்கல், வேடல் , அவளூர், நெய்குப்பம், குண்ணவாக்கம் என ஆறு கிராமங்களிலும், உத்திரமேரூர் தாலுகாவில் மாம்பதூர் , ஒழுகரை, சிறுமையிலூர், மருதம் ஆகிய நான்கு கிராமங்களில் துவக்கப்படும் என நுகர் பொருள் வாணிபக் கழகம் அறிவித்தது.

அவ்வகையில் மேல்பேரமநல்லூர் பகுதியில் இன்று நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடத்தை திறந்து வைத்து, நெல் கொள்முதலை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.மேலும் அரசு விதிகளை முறையாக பின்பற்றி விவசாயிகளுக்கு உரிய பணத்தை கால அவகாசத்திற்குள் அளிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் , ஒன்றிய செயலாளர் குமணன் , நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story