தஞ்சாவூரில் நீண்ட காலப் போராட்டத்திற்கு தீர்வு
குருங்குளம் மேற்கு கிராமத்தில் 60 ஆண்டுகளாக போராடிய 50 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கல் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்
தஞ்சாவூர் அருகே குருங்குளம் மேற்கு கிராமத்தில் 60 ஆண்டுகளாக போராடிய 50 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேற்று இலவச வீட்டுமனை பட்டாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். தஞ்சாவூரில், செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனம் வழங்குதல், மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி வழங்குதல், தொழிலாளர் நல வாரியம் மூலம் ஓய்வூதிய உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்குதல் உள்ளிட்ட 1,738 பேருக்கு ரூ.21.47 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், கா.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மேயர் சண்.ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: தஞ்சாவூர் அருகே குருங்குளம் மேற்கு கிராமத்தில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைப் பகுதியில் 60 ஆண்டுகளாக 50 பேர் வசித்து வருகின்றனர். வருவாய்த்துறை பதிவேட்டில் சர்க்கரை ஆலைக்குரிய இடம் என தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டதால், அங்கு வசித்த 50 பேர் கடந்த 60 ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு போராடி வந்தனர். இவர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்த மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இன்று அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை வழங்தியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 33 மாதங்கள் கடந்த நிலையில், 60 ஆண்டுகளாக நிறைவேறாத கோரிக்கைகள் எல்லாம் தற்போது நடந்துள்ளது என்ற செய்தி வருவது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என கூறலாம். 2014ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வரும் போது, டீசல், பெட்ரோல் விலையை 40 ரூபாய்க்கு கீழே குறைப்பேன் என்றார். அப்போது பெட்ரோல் விலை 59 ரூபாயும், டீசல் விலை 49 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு பெட்ரோல் விலை 105 ரூபாயும், டீசல் விலை 95 ரூபாயாகும் மாறியுள்ளது. நம்முடைய சுருக்கு பையில் இருந்த பணத்தை எடுத்தது யாரு, சுருக்கு பையில் பணத்தை வைத்தது யாரு என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். 2011ம் ஆண்டு 400 ரூபாயாக இருந்த கேஸ் விலை, பத்தாண்டுகளில் 1,200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இப்படியாக நம்மிடம் இருந்து மத்திய அரசு 800 ரூபாய் வரை எடுத்துக் கொள்ளுகிறது. ஆனால் விடியல் பயண திட்டத்தில், இதுவரை 445 கோடி பேர் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 50 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்கிறார். இதன் மூலம் ஒரு மாதத்துக்கு 888 ரூபாய் வரை பெண்கள் சேமிப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது. கேஸ் விலையில் 800 ரூபாய் உங்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளுவது யாரு, 800 ரூபாய் கட்டணமில்லா பயணம் மூலம் தருவது யாரு என்பதை பொதுமக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். சொன்னதை செய்யக்கூடிய அரசு தான் நமது அரசு. நிதி நெருக்கடி இருந்து வருகிறது. மத்திய அரசு நமக்கு ஆதரவாக இல்லை. அதையும் தாண்டி சொன்ன வாக்குறுதியை தாண்டி நிறைவேற்றக்கூடிய அரசாக நமது முதல்வர் இந்த அரசை நடத்திக்கொண்டு இருக்கிறார். எந்த திட்டத்தையும் நிறுத்தவில்லை. நல்ல திட்டத்தை யார் கொண்டு வந்தாலும், அந்த திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் முதல்வர் நினைக்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும்" என்றார்.
Next Story