உயர்கல்வி படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய அமைச்சர்
தஞ்சை தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் உயர்கல்வி பயிலும் அரசு பள்ளிமாணவர்களுக்கு மடிக்கணினிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில், இளங்கலை பட்டப் படிப்பை மேற்கொள்ளவும், அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது இதையொட்டி, தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு மாதிரி உறுப்பினர் மற்றும் செயலாளர் இரா.சுதன் முன்னிலையில் மடிக்கணினி வழங்கினார். தமிழ்நாட்டில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற 247 மாணவ, மாணவிகள் நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் இளங்கலை பட்டப்படிப்பு மேற்கொள்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆக.9 அன்று மாணவ, மாணவிகளை பாராட்டும் விதமாக மடிக்கணினிகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நாட்டின் முதன்மை கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில், தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களை சேர்ந்த 13 மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் பயில்கின்ற மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர்), மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனர் இயக்குநர் பழநிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சு.க.முத்துசெல்வம், முதன்மை கல்வி அலுவலர் இரா.மதன்குமார், தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன முதல்வர் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story