அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 2வது முறையாக சோதனை
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்ட (தெற்கு) திமுக செயலாளர் மற்றும் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக இருப்பவர் எ.வ.வேலு. இவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர் மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்த சாவல்பூண்டி சுந்தரேசன். இவர், தனது கட்சியினருடன் பேசியஆடியோ கடந்த 2021 ஜனவரியில் வெளியாகி வைரலானது. வாரிசு அரசியலுக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்திருந்த சாவல்பூண்டி சுந்தரேசன், அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் அவர், திரைப்பட பைனான்ஸ் உட்பட பல்வேறு தொழில்களை அமைச்சர் வேலுசெய்வதாக குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து அமைச்சர் வேலு, செய்தியாளர்களிடம் கடந்த 2021 பிப்ரவரியில் விளக்கம் அளித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுவதுமாக மறுத்தார். இதற்கிடையில், 2021 சட்டப்பேரவை தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட 8 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து,திருவண்ணாமலை தேரடி வீதியில் திமுகதலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
அதே நேரத்தில், திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள எ.வ.வேலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனைநடத்தினர். 2 நாட்கள் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள், பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இரண்டரை ஆண்டுகளில் மீண்டும் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்றுசோதனையை தொடங்கி உள்ளனர்.முந்தைய சோதனைக்கும், தற்போதைய சோதனைக்கும் பெரிய அளவில் வேறுபாடு உள்ளது. தமிழக அரசு மூலமாக நிதி ஒதுக்கீடு அதிகம் இருக்கும் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சிறு துறை முகங்கள் துறை என 3 முக்கிய துறைகள், அமைச்சர் எ.வ.வேலு வசம் உள்ளன. மேலும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலு நெருக்கமாக உள்ளார். முதல்வர் முக்கிய ஆலோசனை: திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் கடந்த அக்.22-ம் தேதி நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக அவர், அமைச்சர் எ.வ.வேலுவின் விருந்தினர் மாளிகையில் 2 நாட்கள் முகாமிட்டிருந்தார். அப்போது, முக்கிய ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக, வருமான வரித் துறை சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி.ஆகியோரது வரிசையில் அமைச்சர் எ.வ.வேலு மீதும் வருமானவரித் துறை மற்றும் அமலாக்கத் துறையின் பார்வை விழுந்துள்ளதால் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட (வடக்கு) திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் கூறியதாவது: முதல்வர் வருகையின்போதும், வருகைக்கு பிறகும் அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்துகின்றனர். முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியை அமைச்சர் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். அரசின் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பணியையும் சிறப்பாக செய்து வருகிறார். இதனால் திமுகவினர் மற்றும் மக்களிடம் அவருக்கு நற்பெயர் கிடைக்கிறது. அவரது வளர்ச்சி மற்றும் மக்களிடம் உள்ள ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல், வருமான வரித் துறையை ஏவிவிட்டு மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்தப்படுகிறது. மறைந்து தாக்குதல்: ராமாயணத்தில் வாலியை மறைந்திருந்து ராமன் தாக்கியதுபோல, பாஜகவினர் மறைந்திருந்து தாக்குகின்றனர். 2016-ல் 50 ஆயிரம் வாக்குகள், 2021-ல் 95 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் வேலு வெற்றி பெற்றார். முதல்வர் வருகையின்போதும், வருகைக்கு பிறகும் சோதனை நடத்துவதால் திமுகவினர் துவண்டுவிட மாட்டார்கள். நாடாளுமன்ற தேர்தல் பணியை முடக்கிவிடலாம் என நினைக்கின்றனர். முன்பைவிட இரண்டு மடங்கு உத்வேகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் எங்கள் தேர்தல் பணி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.