அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் வீட்டில் சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் வீட்டில் சோதனை

சோதனை நடைபெறும் இடம்


திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு மற்றும் அவருக்கு சொந்த கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று பின்னிரவு முதல் அமைச்சரின் மகன் கம்பன் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.

அமைச்சரின் மகன் கம்பனின் வீடு திருவண்ணாமலை நகரம் திண்டிவனம் சாலையில் உள்ளது. அங்கு நேற்று பின்னிரவு வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். விடிந்தும் சோதன தொடர்கிறது. சோதனை நடைபெறுவதை ஒட்டி அமைச்சர் மகன் வீட்டில் சிஐஎஸ்எஃப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூரிலும் சோதனை: இதேபோல், கரூரில் தோட்டக்குறிச்சி பேரூராட்சி முன்னாள் தலைவர் சக்திவேல் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நேற்று முடிவடைந்த நிலையில் வேலு உதவியாளர் சுரேஷ் வீடு, நிதி நிறுவனம், முன்னாள் எம்எல்ஏ வாசுகி சகோதரி பத்மா வீடு ஆகிய 3 இடங்களில் மட்டும் வருமான வரித்துறை சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 80 இடங்களில் சோதனை: முன்னதாக நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடையவர்களின் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை திருவான்மியூரில் உள்ள காசா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்நிறுவன அதிகாரிகளான திருவல்லிக்கேணி அமுதசேகரன், பட்டினப்பாக்கம் தினகரன் வீடுகள், தியாகராய நகரில் அப்பாசாமி ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரவி அப்பாசாமி வீடு, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரெசிடென்சி டவர் நட்சத்திர ஓட்டல், ரெசிடென்சி ஒட்டல், கோட்டூர்புரம் அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் வீட்டில் சோதனை நடந்தது. சென்னை அண்ணா நகர் மேற்கில் கட்டுமான தொழிலதிபர் கமலாகர் ரெட்டி வீடு, ஷெனாய் நகரில் வசிக்கும் திருவண்ணாமலை மாவட்ட தொழிலதிபர் செவ்வேல், புரசைவாக்கத்தில் டிவிஎச் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒப்பந்ததாரர் அமித், வேப்பேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஃபைனான்சியர் கமல் ஜெயின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் துரைவெங்கட் வீடு, அலுவலகம், தண்டராம்பட்டு அடுத்த வரகூரில் கிரானைட் நிறுவனம், விழுப்புரம்கிழக்கு சண்முகாபுரம் காலனியில்கிரானைட் தொழிலதிபர் பிரேம்நாத் வீடு, அவரது சொகுசு விடுதி, வழுதரெட்டியில் உள்ள கிரானைட் கடை, கிழக்கு புதுச்சேரி சாலையில் உள்ள மோட்டார் விற்பனை நிலையத்திலும் சோதனை நடந்தது. கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரத்தில் பார்சன் குடியிருப்பு வளாகத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயக்குமார், அவரதுமகன் ஸ்ரீராம் வீடுகளிலும் சோதனை நடந்தது.

ஜெயக்குமாரின் மனைவி மீனா, திமுககலை இலக்கிய பகுத்தறிவு பிரிவில் மாநில துணை செயலாளராக உள்ளார். சிங்காநல்லூர் பகுதி திமுக செயலாளர் எஸ்.எம்.சாமி வீடு,சவுரிபாளையத்தில் உள்ள கட்டுமான நிறுவனம், கரூரில் வேலுஉதவியாளர் சுரேஷ் வீடு, காந்திபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம், கரூர் பெரியார் நகரில்முன்னாள் எம்எல்ஏ வாசுகியின் சகோதரி பத்மா வீடு, தோட்டக்குறிச்சி முன்னாள் பேரூராட்சி தலைவர் சக்திவேல் வீட்டிலும் சோதனை நடந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று திருவண்ணாமலை மற்றும் கரூரில் சோதன நடைபெற்று வருகிறது.

Tags

Next Story