அமைச்சர் கீதாஜீவன் மணி விழா

அமைச்சர் கீதாஜீவன் மணி விழா

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றபோது

அமைச்சர் கீதாஜீவன் மணி விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தமிழக சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் - ஜீவன் ஜேக்கப் ஆகியோரின் மணி விழாவையொட்டி, சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தூத்துக்குடி பெரியசாமி, எபனேசர் ஆகியோருக்கு மகளாக பிறந்த கீதாஜீவன் எம்.காம்., பி.எட்., பட்டப்படிப்பை முடித்து ஆசிரியராக பணியாற்றினார். இவர் தூத்துக்குடியில் ஆங்கிலவழிக் கல்வியளிக்கும் ஒரு பள்ளிக்கூடத்தின் தாளாளராக இருந்து வருகிறார். திமுக மாவட்ட செயலாளராக பணியாற்றிய பெரியசாமி தனது அரசியல் வாரிசாக அரசியலுக்கு அறிமுகப்படுத்தி 1996 முதல் 2001 வரை உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வுச் செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார். அவர் பணியாற்றிய காலத்தில் சிறந்த மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் விருது பெற்றார். 2006-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். அதன்பின் திமுக தலைவரான கருணாநிதி அமைச்சரவையில் சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். 2வது முறையாக 2016-ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றிப் பெற்றார். அதன்பிறகு 2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தமிழக சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சராக பதவியேற்று, பணியாற்றி வரும் கீதாஜீவன் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது பணியை பாராட்டி இரண்டு முறை தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் 'பெண் சிங்கம்' என்று பாராட்டை பெற்றார்.ஜீவன் ஜேக்கப் தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் செயலாளராகவும், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளராகவும் இருந்து வருகிறார். அமைச்சர் கீதாஜீவன் - ஜீவன் ஜேக்கப் தம்பதியினரின் மணிவிழா வரும் 1-ம் தேதி மாலை தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் திருமண மண்டபத்தில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசுதுறையை சார்ந்த அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்பை சேர்ந்தவர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் என பலர் மணிவிழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags

Next Story