சாத்தூர் பகுதியில் பயிர் சேதம் குறித்து அமைச்சர் ஆய்வு

சாத்தூர் பகுதியில் பயிர் சேதம் குறித்து அமைச்சர் ஆய்வு
சாத்தூர் பகுதியில் பயிர் சேதம் குறித்து அமைச்சர் ஆய்வு
சாத்தூர் பகுதியில் பயிர் சேதம் குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற பயிர்சேதம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் முன்னிலையில், மழையால் சேதம் அடைந்த பயிர்களின் விவரம் குறித்து விவசாயிகளிடம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் கேட்டறிந்து, பயிர் சேதம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, எம்.ரெட்டியபட்டி, நரிக்குடி ஆகிய வட்டாரங்களில் நெற்பயிர்கள் 23,214 ஹெக்டேர் பரப்பிலும்,

சிறுதானியங்கள் 53,621 ஹெக்டேர் பரப்பிலும், பயறு வகைகள் 5,637 ஹெக்டேர் பரப்பிலும், எண்ணெய் வித்துக்கள் 4,784 ஹெக்டேர் பரப்பிலும், பருத்தி 15,552 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 893 ஹெக்டேர் பரப்பிலும் ஆக மொத்தம் 1,03,701 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அதன்படி, கனமழையின் காரணமாக, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் குறித்து, வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் உயர் அலுவலர்கள் தலைமையில் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அனைத்து ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து ஆய்வு செய்து, அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளிடம் பயிர் சேதங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் பெருமக்கள் அவர்கள் கேட்டறிந்து வருகிறார்கள்.

அதன்படி இன்று சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மழையால் சேதம் அடைந்த பயிர்களின் விவரம் குறித்து விவசாயிகளிடம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் கேட்டறிந்து,

பயிர் சேதம் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பங்களை விவசாயிகளிடம் இருந்து பெற்றுக் கொண்டார். மாவட்டத்தில் நெற்பயிர்கள், பயிர் வகைகள், மக்காச்சோளம், சூரியகாந்தி, பருத்தி போன்ற பயிர்கள் எல்லாம் இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் ஆரம்பத்திலேயே விவசாயம் தொடங்கப்பட்டு, விவசாய பணிகள் எல்லாம் நடைபெற்று, இன்னும் ஒரு மாத காலத்தில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில், எதிர்பாராத விதமாக பெய்த மழையினால் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களோடு நமது விருதுநகர் மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பயிர் சேதம் அடைந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சியருடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களுக்கு உரிய இழப்பீடுகள் வழங்குதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம். விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், கணக்கீட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியரும், வேளாண்மைத்துறை அலுவலர்களும் மேற்கொண்டுள்ளனர்.

பயிர்சேதம் குறித்த விபரங்களை மாவட்ட ஆட்சியரிடம் பெற்று, தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டு விருதுநகருக்கு வருகை தந்தபோது, விருதுநகர் மாவட்டத்தில் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த விவரங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பயிர் சேதம் குறித்து கணக்கிட்டு அறிக்கையை அனுப்புமாறு தெரிவித்தார்கள்.

அதன் அடிப்படையில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளிலும், கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். இக்கூட்டத்தில் சாத்தூர் பகுதிகளில் எங்கெங்கெல்லாம் பாதிப்புகள் இருக்கிறது, கணக்கெடுப்பு சரியாக உள்ளதா, குறைபாடுகள் இருக்கிறதா என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

Tags

Next Story