இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்
கன்னியாகுமரி மாவட்ட வருவாய்துறையின் சார்பில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் வட்டத்திற்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கொட்டாரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். இவ்விழாவில் அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கினார்.
அவர் பேசுகையில்:- கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீர்க்கப்படாத பொதுமக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சுமார் 10,000 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மட்டும் 658 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ.தமிழரசி உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.