திட்டப்பணிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டல்
பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார் நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளாநத்தம் ஊராட்சி, ஆலாம்பாளையம் பேரூராட்சி மற்றும் பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம்,
வெடியரசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகள் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை தாங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினருமான எஸ்.எம்.மதுரா செந்தில் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் கலந்துகொண்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்து தெரிவித்ததாவது... ”ஒரு கோவிலுக்கு காணிக்கை அளிப்பதை விட ஒரு ஏழைக்கு கல்வி கொடுப்பது சிறப்பு” என்ற அம்பேத்கர் அவர்களின் கூற்றை மெய்பிக்கும் வகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், காலை உணவுத் திட்டம், புதுப்பெண் திட்டம், உங்கள் கையில் உங்கள் நூலகம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
இன்றைய தினம் வெடியரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நம் மாவட்டத்தில் பள்ளிபாளையம் பகுதியை சார்ந்த மோத்தி ஸ்பின்னர்ஸ் மில் பி.லிட் நிறுவனத்தினர் ரூ.21.05 இலட்சம், வி.பி.டெக்ஸ் பி.லிட் நிறுவனத்தினர் ரூ.10.52 இலட்சம், விஎஸ்பி இண்டஸ்டிரீஸ் பி.லிட் நிறுவனத்தினர் ரூ.7.63 இலட்சம், விஎஸ்எம் வேவர்ஸ் பி.லிட் நிறுவனத்தினர் ரூ.7.63 இலட்சம் என அதிக பங்களிப்பை வழங்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார் என தெரிவித்தார்.
தொடர்ந்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பிள்ளாநத்தம் ஊராட்சியில் ரூ.39.32 இலட்சம் மதிப்பீட்டில் பிள்ளாநத்தம் காலனி முதல் செட்டியாகவுண்டம்பாளையம் – நாய்க்கன்வலவு வரை புதிய தார்சாலை அமைக்கும் பணி, நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.95.60 இலட்சம் மதிப்பீட்டில் ஆலாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட 4வது வார்டு கீழ்க்காலனி முதல் கிழக்குத் தொட்டிப்பாளையம் ரயில்வே கேட் மற்றும் கிழக்குத் தொட்டிப்பாளையம் ரயில்வே கேட் முதல் கிழக்குத் தொட்டிப்பாளையம் ரயில்வே மேம்பாலம் வரை தார்சாலை அமைக்கும் பணி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி,
வெடியரசம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 4 வகுப்பறை கட்டடம் கட்டும் பணி என மொத்தம் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் 3 புதிய திட்டப்பணிகளுக்கு வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சிகளில் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேல், பேரூர் கழக செயலாளர் கார்த்திக் ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சிவக்குமார், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார் துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.