கோவையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய இணை அமைச்சர்

கோவையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய இணை அமைச்சர்

நலத்திட்ட உதவிகள் வழங்கிய மத்திய அமைச்சர்

கோவையில் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்வில் நலத்திட்டங்களை இணை அமைச்சர் வழங்கினார்

கோயம்புத்தூர் மாநகரில் உள்ள ரத்தினபுரி பகுதியில் இன்று நடைபெற்ற 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்' நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.

மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு தொழில்களுக்கான கடன் உதவி, சாலையோர வியாபாரிகளுக்கான பி.எம்.சுவநிதி திட்டம் மற்றும் காப்பீடு திட்டங்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.

மேலும், தபால் துறையின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கும், உஜ்வாலா கேஸ் இணைப்பு திட்ட பயனாளிகளுக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு திட்டப்பயன்கள் வழங்கப்பட்டன. இதனை மத்திய இணை அமைச்சர் பார்வையிட்டார்.தொடர்ந்து வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் பேசுகையில் பாரத பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேசத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதாக குறிப்பிட்டார். தேசிய நெடுஞ்சாலைகள் சிறப்பாக அமைக்கப்பட்டு வருவதாகவும் கோயம்புத்தூர் விமான நிலையம் உட்பட நாட்டின் விமான சேவைகள் விரிவாக்கப்பட்டு தேசத்தின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

இவற்றோடு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமரின் இலவச வீடு, ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதி, மின் இணைப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், 2047 ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க அனைவரும் சேவை மனப்பான்மையோடு செயலாற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை நிகழ்ச்சியின் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைவதாகவும், புதிதாக திட்டங்களில் இணைவோர் மத்திய அரசின் பல்வேறு சேவைகளை பெற விரும்புவோர் இதில் கலந்துகொண்டு பயன் பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை விழிப்புணர்வு வாகனத்தை நேரில் பார்வையிட்டு மத்திய அரசின் திட்டங்கள் அடங்கிய காலண்டர்களை மத்திய அமைச்சர் பொதுமக்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story