சாலை விபத்தில் வனசரகர் உட்பட 3பேர் உயிரிழப்பு - அமைச்சர் நேரில் அஞ்சலி

சாலை விபத்தில் வனசரகர் உட்பட 3பேர் உயிரிழப்பு - அமைச்சர் நேரில் அஞ்சலி
 வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அஞ்சலி 

ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்தவர் ரகுநாதன், 41. இவர், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வன சரக வனவராக பணியாற்றி வந்தார். இவருடன், கொல்லிமலை அரியூர் நாட்டைச் சேர்ந்த செல்வகுமார், 38, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜன், 40 ஆகிய மூவரும் மரம் வெட்டும் உத்தரவு பெறுவதற்காக, கொல்லிமலையில் இருந்து சேலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு பொலீரோ ஜீப்பில் நேற்றிரவு புறப்பட்டனர். இரவு, 11:30 மணியளவில் பேளுக்குறிச்சி மோளப்பாளையம் வந்த போது, பஸ் நிறுத்த நிழற்கூடம் மீது எதிர்பாராதவிதமாக ஜீப் மோதியது. இதில் மூவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். சம்பவ இடத்திற்கு சென்ற பேளுக்குறிச்சி போலீசார் உடல்களை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் முகபத்ரா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் ஆகியோர் ராசிபுரம் அரசு மருத்துவனைக்கு சென்று, கொல்லிமலை வன சரக வனவர் ரகுநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர். வனவர் ரகுநாதன் குடும்பத்தினருக்கு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சேமநல நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்கினார். மேலும், அவருடன் பயணித்து சாலை விபத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார், ராசிபுரம் காவல் ஆய்வாளர் சுகவனம், காவல் உதவி ஆய்வாளர் தங்கம், சிவா, ஜெயக்குமார், கண்ணன், சுப்பிரமணி, ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா, மற்றும் வனத்துறை அதிகாரிகள், ராசிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story