அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு - மேலும் ஒரு பிறழ் சாட்சி

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு -  மேலும் ஒரு பிறழ் சாட்சி

அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒரு அரசு அதிகாரி பிறழ் சாட்சியம் அளித்தார்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை செம்மண் குவாரியில், கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, விதிமீறி செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது, கடந்த 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்த்து, விசாரணை நடந்து வருகிறது. இவர்களில் இதுவரை 32 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். அதில், 25 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சதானந்தன், கோதகுமார், கோபிநாத், ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன் நேரில் ஆஜராகினர்.

அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி ஆஜராகவில்லை.அரசு தரப்பின் 33வது சாட்சியாக, முன்னாள் விக்கிரவாண்டி வி.ஏ.ஓ.,வும், தற்போதைய துணை பி.டி.ஓ.,வாக உள்ள இளையராஜா ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், இந்த வழக்கு தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று, அரசுக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்தார்.விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணையை, இன்றைக்கு (12ம் தேதி) ஒத்திவைத்தார்.

Tags

Next Story