விருதுநகர் : பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் துவக்கி வைப்பு

விருதுநகர் : பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் துவக்கி வைப்பு
விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்ககூடிய அரசாக, விவசாயிகள் சொன்னால் செய்யக்கூடிய அரசாக, அவர்களின் வேதனையை புரிந்து கொள்ளும் அரசாக திமுக அரசு இருக்கிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம்,கரிசல்குளம், ஓ.கோவில்பட்டி, முடியனூர், அயன்ரெட்டியாபட்டி ஆகிய ஊர்களில் புதிய தார் சாலை,பயணியர் நிழற்குடை போன்ற நிறைவுற்ற ரூ.2 கோடி மதிப்பிலான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில்,மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் மல்லாங்கிணர் பேரூராட்சியில் நீர்வளத்துறை சார்பில் ரூ.16 கோடி மதிப்பீட்டில், குண்டாறு வடிநிலக்கோட்ட பாசனக்கால்வாய் புனரமைக்கும் பணியையும் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,35 ஆண்டுகால கனவுத்திட்டமான இத்திட்ட பணிகளை செயல்படுத்துவதன் மூலம் காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு பிர்க்காவை சேர்ந்த வையம்பட்டி கிராமம், நந்திக்குண்டு கிராமம், மல்லாங்கிணறு கிராமம், முடியனூர் கிராமம், திம்மன்பட்டி கிராமம், சந்திரன்குளம் கிராமம், தோனூகால் கிராமம், தண்டியனேந்தல் கிராமம் மற்றும் வலையன்குளம் கிராமம் மற்றும் இக்கிராமங்களை சேர்ந்த 9 கண்மாய்கள்(746.62 ஏக்கர்) பாசன நீர் பெற்று பயனடைந்து அதிக பயிர் மகசூல் பெறும்.

மேலும், இப்பணிகள் மூலம் கண்மாய்களுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்கும் நிலையில் அப்பகுதிகளில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்து கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறு நிரம்பி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் பிரச்சனை தீர்வதுடன் இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்றார்.விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்ககூடிய அரசாக, விவசாயிகள் சொன்னால் செய்யக்கூடிய அரசாக, அவர்களின் வேதனையை புரிந்து கொள்ளும் அரசாக திமுக அரசு இருக்கிறது என்றும் தொடர்ந்து அனைவரும் இந்த நல்லாட்சிக்கு ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story