விபத்தில் உயிரிழந்த நிர்வாகி குடும்பத்திற்கு காசோலை வழங்கிய அமைச்சர் உதயநிதி
விபத்தில் உயிரிழந்த நிர்வாகி குடும்பத்திற்கு காசோலை வழங்கிய அமைச்சர் உதயநிதி
விபத்தில் இறந்த திமுக பூத் கமிட்டி உறுப்பினர் சதீஷ்குமார் குடும்பத்திற்கு அமைச்சர் உதயநிதி ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
திருப்பூர், சாலை விபத்தில் உயிரிழந்த தி.மு.க. நிர்வாகியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் உதவித்தொகைக்கான காசோலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சேலம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணியின் மாநில மாநாடு கடந்த மாதம் 21&ந் தேதி மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் சென்றிருந்தனர். இதில் திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் மேற்கு ஒன்றியம் ஜோத்தம்பட்டி ஊராட்சி அரியநாச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த பாகம் எண் 241, பூத் கமிட்டி உறுப்பினரும், நெசவுத்தொழிலாளியுமான சதீஷ்குமார் (30) சென்றார். இந்நிலையில் மாநாட்டை முடித்து திருப்பூர் மாவட்டத்திற்கு திரும்பும் போது சேலத்தை அடுத்த சங்ககிரி டோல் கேட் அருகில் உணவு சாப்பிடுவதற்காக சாலையை கடக்கும் போது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதி பலியானார். இது குறித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே திருப்பூருக்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வந்த உதயநிதி ஸ்டாலின் அவர் சதீஷ்குமார் குடும்பத்தினரை சந்தித்து இரங்கல் தெரிவித்தார். மேலும், தி.மு.க. இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை அவரிடம் குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி 4வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர்கள் தங்கராஜ், ஜெயக்குமார், மேற்கு மண்டல இளைஞரணி பொறுப்பாளர் பிரகாஷ், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story