நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் அமைச்சர் வேலு திடீர் ஆய்வு
ராணிப்பேட்டையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் அமைச்சர் வேலு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே நெடுஞ்சாலை துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது அலுவலகத்தில் ஒப்பந்தம் பதிவேடுகள், பணிகள் குறித்த பதிவேடுகள், திட்ட மதிப்பீடுகள் உட்பட பல்வேறு கோப்புகளை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்ற முதல் அரசின் பல்வேறு துறைகளை மேம்படுத்தி வருகிறார். அந்த வகையில் நெடுஞ்சாலை துறையை மேம்படுத்துவதற்கான பல்வேறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நான் சுற்றுப்பயணம்மேற்கொள்ளும் போது, அந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலங்களில் நானும், துறை செயலாளர், தலைமை பொறியாளர்களுடன் உள் தணிக்கை பணிகளை திடீர் ஆய்வாக மேற்கொண்டு வருகிறோம். இதில், நெடுஞ்சாலை துறையில் பராமரிக்கப்படும் 12-க்கும் மேற்பட்ட கோப்புகளை சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
அந்த வகையில் வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, திடீர் ஆய்வாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள இந்த நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் திடீர் ஆய்வுமேற்கொண்டோம். இங்கு ஒப்பந்தம், திட்ட மதிப்பீடு, நிதி ஒதுக்கீடு செய்த அதற்கான பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மூலமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
மத்திய அரசின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளவில்லை. தினமும் ஆயிரகணக்கான மக்கள் இந்த சாலையில் பயணிப்பதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் நான் டெல்லி செல்லும்போது அந்த துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து அழுத்தம் அளித்து விட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதில், மாவட்ட ஆட்சியர் வளர்மதி, நெடுஞ்சாலை துறை முதன்மை செயலாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் மற்றும் ராணிப்பேட்டை கோட்டப்பொறியாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.