செட்டிநாடு கால்நடை பண்ணையில் அமைச்சர்கள் ஆய்வு
அதிகாரிகள் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட செட்டிநாடு கால்நடைப்பண்ணையின் செயல்பாடுகள் குறித்து, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர்கள் தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட செட்டிநாடு ஊராட்சியில், கால்நடைப் பராமரிப்புத்துறையின் சார்பில், மொத்தம் 1,907.32 ஏக்கர் பரப்பளவில் கால்நடைப் பண்ணை இயங்கி வருகிறது. இதில், 150 ஏக்கர் பரப்பளவில், கால்நடைகளுக்கு தேவையான பராமரிக்கப்பட்டு வரும் கால்நடை தீவனம் மரங்கள் மற்றும் பல்வேறு வகையான 464 மாடுகள் வளர்க்கப்படும் கால்நடை கொட்டகைகள், கன்றுக் கொட்டகைகள், பால் கறவைக்கூடம் மற்றும் பல்வேறு வகையான 269 ஆடுகள் வளர்க்கப்படும் ஆட்டுக்கொட்டகைகள், மற்றும் சுமார் 781 அசில் நாட்டுக்கோழி குஞ்சுகள் வளர்க்கப்படும் கோழிக் கொட்டகைகள் ஆகியவைகள் பயன்பாட்டில் உள்ளன.
மேலும், இப்பண்ணையில் ஆடுகள் பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் ஆடுகளில் இராமநாதபுரம் வெள்ளை இன செம்மறி ஆடுகள் மற்றும் தலைச்சேரி, ஜமுனாபாரி இன வெள்ளாடுகள், ஆகியவற்றை அதிக எண்ணிக்கையில் கால்நடை வளர்ப்போருக்கு வழங்கிடவும்,
அதேபோன்று, மாட்டினப் பிரிவில் பராமரிக்கப்பட்டு வரும் மாடுகளில் 425 தார்பார்கர், சாகிவால் இன மாடுகளின் பால் உற்பத்தியை மேலும் பெருக்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, இப்பண்ணையில் விவசாயப் பிரிவில் 40 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோ-4 தீவனப்புல், 150 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரத்தீவனப்புல், 15 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படுகின்ற நாற்றுச்சோளம் ஆகிவற்றை கால்நடை வளர்ப்போருக்கு வழங்கிடவும், இப்பண்ணையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஊறுகாய்ப்புல் தீவனக் கட்டுக்கள், அனைத்து கருவிகளையும் செயல்படும் நிலையில் பராமரித்து, உற்பத்தியை மேலும் பெருக்கிடவும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 2021-22 ஆண்டு செட்டிநாடு மாவட்ட கால்நடைப் பண்ணையில் நாட்டுக்கோழி இனப்பெருக்கப் பண்ணை உருவாக்குதல், தீவன ஆலை அமைத்தல் மற்றும் குஞ்சு பொரிப்பகம் அமைத்தல் திட்டத்தின் கீழ் 13.81 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுக்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பசுந்தீவன உற்பத்தியினை மேம்படுத்திடவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கால்நடைகளின் எண்ணிக்கை, பால் உற்பத்தி ஆகியவைகளை பெருக்கி, தற்போது செயல்பட்டு வரும் செயல்பாடுகளை விட, விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் கூடுதல் சிறப்புடன் இப்பண்ணை செயல்பட துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என அமைச்சர்கள் தெரிவித்தனர்.