ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரியில் அமைச்சர் ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலையில் ஆய்வு செய்தார்.
ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பெரிய பிராணிகள் அறுவை சிகிச்சைக் கூடம், சிறிய பிராணிகள் அறுவை சிகிச்சை கூடம், சிறிய பிராணிகள் புறநோய் சிகிச்சை பிரிவு, பெரிய பிராணிகள் மருத்துவ பிரிவு, புறநோய்கள் சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, உயர் சிகிச்சை பிரிவு, மரபு வழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், கால்நடை மற்றும் கோழிகளில் ஏற்படும் நோய்களுக்கு மரபு வழி சிகிச்சை அளிக்கும் மாத்திரை, களிம்பு மற்றும் திரவ மருந்துகளை தயாரிக்கும் உபகரணங்கள்,. கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை மற்றும் பராமரிப்பு முறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்
பின்னர் அமைச்சர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதன் மூலம் கால்நடை வளர்ப்போர், விவசாயிகளின் தேவை உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது. ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்பேரில் மரபு வழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டு மூலிகைகளை வளர்த்து, அதன் மூலம் கால்நடைகளுக்கு மூலிகைப் பொருட்களைக் கொண்டு மருத்துவம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பேருதவியாக அமைய பெற்றுள்ளது.
கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் என்னென்ன உதவிகள், மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுகிறதோ, அவற்றை எல்லாம் முதலமைச்சர் செய்து தந்துள்ளார்" என்றார். அதனைத்தொடர்ந்து, ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பட்டணம் செம்மறி ஆடுகள் வளமையம் அமைத்தல் திட்டத்தின் மூலம் 10 பயனாளிகளுக்கு செம்மறி ஆடுகளை அமைச்சர் வழங்கினார். இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திருவையாறு), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் முனைவர். நர்மதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.க.தமிழ்செல்வம், மீன் வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன், மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, ஒரத்தநாடு ஒன்றிய குழுத் தலைவர் சி.பார்வதி சிவசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.