கோனேரிப்பட்டி ஏரியில் குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்
ராசிபுரம் கோனேரிப்பட்டி ஏரியில் கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு கொழுந்துவிட்டு எரிந்த தீயில் இருந்து வெளியேறிய கரும்புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி ஒரு மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் சுமார் 100 ஏக்கர் அளவிற்கு ஏரி உள்ளது. கடும் வெயில் காரணமாக வறண்டு காணப்படும் இந்த ஏரியின் கரையோர பகுதிகளில் ராசிபுரம் நகர் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை கொட்டுகின்றனர்.
நகர் பகுதியில் உள்ள பொதுமக்களும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பைகளை பல ஆண்டுகளாகவே கொட்டி வருகின்றனர். இதனால் ஏரியின் கரையோர பகுதி குப்பை மேடாக காட்சியளித்து வந்தது. இந்த நிலையில் ஏரியின் கரையோரப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
இதனால் குப்பை கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் ஏரியின் பல பகுதிகளுக்கு தீ பரவியதில் செடி கொடிகள் மரங்கள் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீயில் இருந்து வெளியேறிய கரும்புகையானது ராசிபுரம் - ஆத்தூர் சாலை பகுதி முழுவதும் பரவியதால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல் உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி, கடும் அவதிக்கு உள்ளாகினர். கோனேரிப்பட்டி ஏரியில் கொட்டப்பட்டுள்ள குப்பைக்கு மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.