ஒசூரில் மாயமான நபர் வனப்பகுதியில் சடலமாக மீட்பு

ஒசூரில் தனியார் நிறுவன ஊழியர் மாயமான நிலையில், வனப்பகுதியில் சடலமாக சிதிலமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதவணி பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் தசரதன், (23 ) இவர் ஓசூர் சின்ன எலசகிரி பாலாஜி நகரில் தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு நிறுவனத்தில் இருந்து வெளியே சென்ற தசரதன் மீண்டும் அவர் தங்கியிருந்த அறைக்கு சொல்லவில்லை, இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை சம்பத் ஒசூர் சிப்காட் காவல் நிலையத்தில் கடந்த மாதம், 5 ஆம் தேதி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது தசரதன் ஓசூரில் இருந்து பேரண்டப்பள்ளி வரை நடந்தே சென்றது தெரிந்தது. அதன் பின்னர் அவர் எங்கு சென்றார் என்பதை போலீசாரால் கண்டறிய முடியவில்லை. இந்த நிலையில் இன்று பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் உள்ள நீரோடையில் வாலிபர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் எலும்பு கூடாக கிடப்பதாக ஒசூர் ஹட்கோ போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சடலமாக கிடந்த வாலிபரின் சட்டையில் இருந்த ஒரு பாக்கெட்டில் செல்போனும் மற்றொரு பாக்கெட்டில் பிஸ்கட் பாக்கெட்டும் இருந்துள்ளது. சந்தேகத்தின்பேரில் ஏற்கனவே மாயமாகி இருந்த தசரதனின் பெற்றோரை அழைத்து வந்து போலீசார் காட்டியபோது அங்கிருந்த உடைகள், ஷீ, செல்போன் ஆகியவற்றை வைத்து அங்கு கிடந்தது மாயமான தசரதனின் உடல் என்பது உறுதி செய்யப்பட்டது. ஒசூர் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள் தசரதன் மாயமாகி இருந்ததால் சிப்காட் போலீசார் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஓடை தண்ணீரில் சடலம் அடித்து வரப்பட்டதால் தண்ணீர் குடிக்கும் போது, ஓடைக்குள் தசரதன் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது சடலத்தை வன விலங்குகள் கடித்துள்ளன. மேலும் தசரதனை குள்ளன் என சிலர் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணமா என ஒசூர் சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story