மாயமான மாணவன் சடலமாக மீட்பு

மாயமான மாணவன் சடலமாக மீட்பு

மாணவர் மரணம்

சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் மாயமான 6-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டியை சேர்ந்தவர் கலையரசி. இவருடைய மகன் ரிதனீஸ்வரன் (வயது 11). அம்மாபேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற ரிதனீஸ்வரன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவனை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மகன் மாயமானது குறித்து கலையரசி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே வடக்கு கிருஷ்ணன் புதூர் சுண்ணாம்பு சூலை தெருவில் உள்ள ஒரு கிணற்றில் ரிதனீஸ்வரன் பிணமாக மிதந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரின் போலீசார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மாணவன் ரிதனீஸ்வரன் உடலை வெளியே மீட்டு வந்தனர். அப்போது அவனது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ரிதனீஸ்வரன் கிணற்றில் நண்பர்களுடன் குளித்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story