பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், கல்லூரணிக்காடு ஊராட்சியில், பொது வினியோக அங்காடி கட்டிடம் ரூ.9 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதனை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கூட்டுறவு சார்பதிவாளர்கள் அறிவழகன், பாலசுந்தர் முன்னிலை வகித்தனர். இதில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், பேராவூரணி தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் அலிவலம் மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன், ஊராட்சி செயலர் கலைஞானம், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், புக்கரம்பை ஊராட்சி, மேற்குடிக்காடு கிராமத்தில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ரூ.6.70 லட்சத்திலும், ஆழ்துளைக் கிணறு ரூ.4.25 லட்சம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் திறந்து வைத்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்.
இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, சடையப்பன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜலெட்சுமி முனியாண்டி, ஊராட்சி மன்றத் தலைவர் காளிமுத்து, துணைத் தலைவர் மல்லிகா சண்முகம், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூவாணம் ஊராட்சி, மேல பூவாணம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடப் பணியை சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, சடையப்பன், ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ஏ.தேவதாஸ், பால் சொசைட்டி தலைவர் பழனிச்சாமி, பசுபதி, ஜெபமாலைராஜ், சூசை, ராம் உள்ளிட்ட கிராமத்தினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து புக்கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், வைப்பறையுடன் கூடிய புதிய சமையல் கூடம், அதேபோல் பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைப்பறையுடன் கூடிய புதிய சமையல் கூடம் திறந்து வைக்கப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் சுவாதி காமராஜ், பள்ளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் வீரத்தமிழன், பள்ளி தலைமை ஆசிரியைகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.