புதிய வழித்தட பேருந்தை இயக்கி துவக்கி வைத்த எம்.எல்.ஏ
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதியிலுள்ள சோமரசம்பேட்டை, அல்லித்துறை, சரவணபுரம், சாந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பள்ளி மாணவா்கள், புங்கனூா் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரவும், மத்தியப் பேருந்து நிலையத்துக்கு நேரடியாகச் செல்லவும் போதிய பேருந்து வசதி இல்லாமல் சிரமப்பட்டனா்.
இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ எம். பழனியாண்டி, புங்கனூருக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்துச் சேவையை புதன்கிழமை தொடங்கி வைத்து, அவரே சிறிது தூரம் பேருந்தை ஓட்டிச் சென்றாா். நிகழ்வில் புங்கனூா் ஊராட்சித் தலைவா் தாமோதரன், போக்குவரத்துக் கழக அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இப் பேருந்தானது ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம், தென்னூா், அரசு மருத்துவமனை, சோமரசம்பேட்டை, அல்லித்துறை, சாந்தபுரம், புங்கனூா், பிராட்டியூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தீரன் நகா், கருமண்டபம் வழியாகச் சென்று மத்திய பேருந்து நிலையம் செல்லும் எனப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனா்