நடமாடும் உணவு விழிப்புணர்வு வாகனம்: கலெக்டர் துவக்கி வைப்பு
நாகர்கோவிலில் நடமாடும் உணவு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் துவகி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உணவு பாதுகாப்புத்துறை சார்பில் இன்று (01.07.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் நடமாடும் உணவு பகுப்பாய்வு விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் துவக்கி வைத்து தெரிவிக்கையில்- நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் எனப்படும் வாகனம் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உணவு பகுப்பாய்வுக்கூடங்களின் கட்டுப்பாட்டில் தலா ஒரு வாகனம் இயங்கி வருகிறது.
மதுரையினை மையமாகக்கொண்டு இயங்கிவரும் இவ்வாகனமானது பொதுமக்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பகுப்பாய்வு குறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆகவே, இவ்வாய்ப்பினை பொதுமக்கள், வியாபரிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பகுப்பாய்வு குறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்தி பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்தார்கள்.
அதனைத்தொடர்ந்து நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்த செயல்முறை விளக்கத்தினை பார்வையிட்டு, கேட்டறிந்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.வே.செந்தில்குமார், மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிதம்பரம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எம்.குமாரபாண்டியன், ஆர்.எம்.பிரவீன் ரகு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.