வாரத்தில் 2 நாட்கள் மாதிரி போட்டி தேர்வு
தஞ்சை மாவட்ட மைய நூலகம் சார்பில் வாரத்தில் 2 நாட்கள் நடைபெறும் மாதிரி போட்டி தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
தஞ்சை மாவட்ட மைய நூலகம் சார்பில் வாரத்தில் 2 நாட்கள் நடைபெறும் மாதிரி போட்டி தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். தஞ்சை மாவட்ட மைய நூலகம் 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1964-ம் ஆண்டு முறையாக நூலக கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் 11 முழு நேர நூலகங்கள், 11 பகுதி நேர நூலகங்கள், 48 ஊர்ப்புற நூலகங்கள், 47 கிளை நூலகங்கள், மாவட்ட மைய நூலகம் 1 என மொத்தம் 118 நூலகங்கள் செயல்பட்டு வரு கிறது.
இதில் மைய நூலகத்தில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 2 லட்சத்து 18 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. மேலும் நூலகத்தின் சார்பில் மின்சார வசதி, வை-பை வசதி, இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் என ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களும் இந்த மைய நூலகம் மூலமாக பயன் அடைந்து வருகிறார்கள். மாதிரி தேர்வு நூலகத்தில் 450-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
தஞ்சை மாவட்ட மையநூலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடக்கும் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 ஆகிய போட்டி தேர்வுகள், டெட் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாதிரி தேர்வு கடந்த 12-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்கள். இந்த மாதிரி தேர்வு வாரந்தோறும் 2 நாட்கள் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு விடைத்தாளில் பதில் அளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும். மாதிரி தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு குறைவான மதிப் பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண்ணை அதிகப்படுத்தும் நோக்கில் அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும்.