அரசுப் பள்ளியில் நவீன அறிவியல் ஆய்வகம்
தாம்பரம் அரசுப் பள்ளியில் நவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரத்தில், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த, 1,200 பேர் படிக்கின்றனர். சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளுக்கு வழிகாட்டும் வகையில், இப்பள்ளி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டி, தனியார் பங்களிப்புடன் 'ரோபோடிக்' பயிற்சி, மாணவர்களுக்கு கல்வி தொடர்பான தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்கும் ஐ.வி.ஆர்.எஸ்., அழைப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
இதனால், பெற்றோர் போட்டி போட்டு, இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்கின்றனர். அரசு பள்ளிகளில், தமிழகத்திலேயே முதல் முறையாக இப்பள்ளியில், எச்.சி.எல்., நிறுவனத்தின் உதவியுடன் நவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், 100க்கும் அதிகமான செயல்முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் புத்தகங்களில் படிப்பதை, செயல்முறை வாயிலாக புரிந்து, அதிக மதிப்பெண்கள் பெரும் நோக்கில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தை, மறைமலை அடிகள் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, மற்ற அரசு பள்ளி மாணவர்களும் பார்வையிட்டு, பயனடைகின்றனர். இதுவரை, 5,000 அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர்.