மோடி அரசாங்கம் பணக்காரர்களுக்கான அரசாங்கம் - திருச்சி சிவா
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினரும் திமுகவின் கொள்கைப்பரப்புச் செயலாளருமான திருச்சி.சிவா பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய பகுதியில் ஏப்ரல் 15ம் தேதி இரவு- 9:30 மணியளவில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மோடி அரசு இதுவரை 108 தடவை எரிபொருள்களின் விலையை உயர்த்தி உள்ளது என்றும், கடந்த ஆண்டு மட்டும் ஜிஎஸ்டி மூலமாக மோடி அரசுக்கு கிடைத்த வரி பணம் 14 லட்சம் கோடி அதில் வெறும் 44 ஆயிரம் கோடி மட்டும் தான் பணக்காரர்கள் தந்தது. மீதமுள்ள 13 லட்சம் கோடியும் உங்களைப் போன்ற ஏழைகள் தந்தது. இப்படி கிடைத்த வரிப்பணத்தை, வங்கியில் மிகப் பெரிய தொழிலதிபர்களுக்கு 10 ஆயிரம் கோடி, 12 ஆயிரம் கோடி கடனாக கொடுத்து. அந்த கடனை பெற்ற தொழிலதிபர்கள் அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளனர்,
அவர்களை கைது செய்து பணத்தினை பறிமுதல் செய்யாமல் அதனை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் விவசாயிகள் வாங்கிய 3 லட்சம் கடனுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கின்றனர். உங்கள் பிள்ளை படிப்பதற்காக கல்வி கடன் வாங்கி இருப்பார். படித்து முடித்த பிறகு வேலை கிடைக்காமல் அதனை செலுத்த முடியாமல் போனால் அவர்களுக்கு வேறு எங்கேயுமே கடன் கிடைக்காமல் செய்யும் இந்த அரசாங்கம் 10, ஆயிரம் கோடி 12, ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்கிறது. இந்த அரசாங்கம் தொடருமா தொடர வேண்டுமா தொடர வேண்டாமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய சிவா, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், கல்விக்கடனை தள்ளுபடி செய்யப்படும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்படும், 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்பி படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். இப்படி திட்டங்களை கொடுப்பது தான் ஏழைகளுக்கான அரசாங்கம். ஆனால் மோடி அரசாங்கம் பணக்காரர்களுக்கான அரசாங்கம் என்றார்.
இந்தியாவில் 22 கோடி பேர் ஒவ்வொரு நாளும் இரவு வயிற்றுக்கு சோறு இல்லாமல் பட்டினியாக உறங்குகிறார்கள் இது வெட்கப்பட கூடிய விஷயம் எனவே இதற்கு காரணமான அரசாங்கத்தை நாம் அடையாளம் காட்ட வேண்டும் அதற்கு வருகின்ற 19ஆம் தேதி நீங்கள் அனைவரும் வாக்கு சாவடிக்கு சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் அருண்நேருவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இந்நிகழ்வின் போது திமுக சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.