விவசாயிகளை ஓட்டாண்டியாக ஆக்க திட்டமிடும் மோடி அரசு: அ.சௌந்தர்ராஜன்
வாக்கு சேகரித்த அ. சவுந்தராஜன்
இந்தியா கூட்டணியின் சார்பில், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும், திமுக வேட்பாளர் ச.முரசொலிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குக் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிரச்சார கூட்டம் பூதலூர் நான்கு ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில், சிபிஎம் மூத்த தலைவர் அ.சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு பேசியதாவது, "பெரும்பான்மை மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாத, அதைப் பற்றி சிந்திக்க மாட்டோம், பேச மாட்டோம் என்று கூறும் மோடி தலைமையிலான பாஜக அரசு அகற்றப்பட வேண்டும். விலைவாசியை உயர்த்தியது மட்டுமின்றி, தொழில்துறையையும் மோடி அரசு சீரழித்து விட்டது. வேலைக்கு ஆள் தேவை என எப்போதும் போர்டு தொங்கும் திருப்பூரின் நிலை என்ன. ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இருந்த வேலையை இழந்தவர்கள், வெளி மாவட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். மோடி அரசின் கொள்கைகளால் தொழில்துறை சீரழிக்கப்பட்டதால் திருப்பூரில் ஏராளமான வீடுகள், கடைகள் காலியாக கிடக்கின்றன.
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும் போது, மீண்டும் தொழில் துறை வளர்ச்சிக்கு நல்ல பல திட்டங்கள் கொண்டு வரப்படும். மோடி ஆட்சியில் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தனர். இந்தச் சட்டங்கள் அமலுக்கு வருமானால்,
15 ஆண்டுகளில் விவசாயிகளின் கைகளில் உள்ள நிலங்கள் அனைத்தும் முதலாளிகளின் கைகளுக்கு சென்று விடும். இன்றைக்கு இடுபொருட்கள் விலை உயர்வு காரணமாக விவசாயிகள் அள்ளாடக்கூடிய நிலை உள்ளது. விவசாயம் செய்வதை காட்டிலும், விவசாயம் செய்யாமல் இருப்பதே லாபம் என்று கூறி, உங்கள் நிலங்களை பிடுங்கி தனியார் முதலாளிகளுக்கு தொழிற்சாலைகளுக்கு கொடுத்து விடுவார்கள். விவசாயிகள் தாங்களாகவே விவசாயத்தை கைவிட்டு வெளியேறிச் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர்.
இன்றைக்கு 30 விழுக்காடு விவசாயிகள் தங்கள் நிலங்களை தரிசாக போட்டுவிட்டு, பக்கத்து ஊர்களுக்கு வேலைக்காக இடம் பெயர்ந்து விட்டனர். விவசாயிகளின் கைகளில் உள்ள நிலங்களை பிடுங்கி அவர்களை ஓட்டாண்டி ஆக்கி விட வேண்டும் என்பதே மோடி அரசின் திட்டம். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள், "விலைவாசி அதிகரித்துள்ளதே" என்று கேட்டதற்கு, "ஜெய் ஸ்ரீ ராம்" என பதில் சொல்லிச் செல்கிறார்.
மக்களை எவ்வளவு காலத்திற்கு ஏமாற்ற முடியும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, இந்தியாவில் மட்டும் எரிபொருட்கள் விலை உயர்வதற்கு என்ன காரணம். மோடி அரசு மக்களை தொடர்ந்து ஏழையாக்கி வருகிறது. 100 நாள் வேலையை குறைத்து வருகிறார்கள். செய்த வேலைக்கு கூலி கொடுக்க, மாநில அரசுக்கு நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுக்கிறது. குழந்தைகள், வளர் இளம்பெண்கள், கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அங்கன்வாடிக்கும், கல்விக்கும், சுகாதாரத்திற்கும் நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அரசு, கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 12 லட்சம் கோடி ரூபாயை அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்துள்ளது. ஒன்றிய மோடி அரசு யாருக்கான ஆட்சி என்பதை மக்கள் உணர வேண்டும். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை. பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகிவிட்டது.
இந்த ஆட்சி நீடிக்கலாமா....? " இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால், எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி, ஒன்றியச் செயலாளர்கள் கே.அபிமன்னன் (தஞ்சாவூர்), கே.காந்தி (பூதலூர் வடக்கு), சி.பாஸ்கர் (பூதலூர் தெற்கு), ஏ.ராஜா (திருவையாறு), திமுக ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.செல்லக்கண்ணு,
இந்திய தேசிய காங்கிரஸ் அறிவழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளங்கோவன், மதிமுக நந்தகுமார், சிபிஐ பாஸ்கர், திமுக தெற்கு ஒன்றியச் செயலர் எஸ்.முருகானந்தம், திராவிடர் கழகம் அல்லூர் பாலு மற்றும் சிபிஎம், சிஐடியு பல்வேறு அரங்க நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிறைவாக திமுக நகரச் செயலர் சுபானந்தம் நன்றி கூறினார்.