அரைகுறையாக ராமர் கோவில் கட்டிய மோடி: திண்டுக்கல் லியோனி விமர்சனம்
ராமர் கோயிலை அரைகுறைவாக கட்டி ராமருக்கு துரோகம் செய்தது மட்டுமின்றி, இந்திய மக்களுக்கும் துரோகம் பிரதமர் மோடி செய்யவுள்ளார் என திண்டுக்கல் லியோனி கூறினார்.
திருவள்ளூர் தி.மு.க. மேற்கு மாவட்டம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடி ராமர் கோயிலை அரை குறைவாக கட்டி ராமருக்கு துரோகம் செய்தது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் துரோகம் செய்ய உள்ளார். அரை குறைவாக கட்டப்பட்ட ராமர் கோவிலால் ராமர் வேதனையுடன் அமர்ந்து கொண்டிருப்பதால் இந்த ஆண்டு அந்த வேதனைகள் எல்லாம் தீர்ந்து மதச்சார்பற்ற கட்சிகளின் கையில் ஆட்சி அமையும்.
ஆளுநர் ஆர்.என் ரவி வரலாற்றுக்கு புறம்பான பல விஷயங்களை பேசி வருகிறார். வள்ளலாரை சனாதனத்திற்கு உச்ச நட்சத்திரம் என்று கூறியவரும் அவரே. அது போன்று பல்வேறு விஷயங்களை கூறிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களை ஆளுநர் திசை திருப்பி வருகிறார். ஜல்லிக்கட்டை சனாதன விளையாட்டு என ஒரு விளையாட்டுத்தனமான செய்தியை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். இதுபோன்று வரலாற்றை திரித்து தமிழ்நாட்டு மக்களை திசை திருப்பும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அது ஒரு போதும் தமிழ்நாட்டில் நடக்காது. இவ்வாறு திண்டுக்கல் லியோனி பேசினார்.