மோகனூர் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவங்கியது!
சித்திரை திருவிழா
நாமக்கல் மாவட்டம், மோகனூர் நகரில், பிரசித்தி பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை விழா, கடந்த 1ம் தேதி இரவு 11 மணிக்கு, காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தொடர்ந்து, காவிரி ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள் புனித நீராடி, தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோயில் முன் நடப்பட்டுள்ள கம்பத்திற்கு ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். தினசரி மாலை 5 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வெள்ளி கவசத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.
ஏப்ரல் 14ம் தேதி இரவு 9 மணிக்கு, வடிசோறு வைத்து சுவாமிக்கு படையல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. ஏப்ரல் 15ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு, பூக்குழிக்கு பூஜை நடைபெறும். மாலை 3 மணிக்கு, திரளான ஆண்களும், பெண்களும் காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி, ஊர்வலமாக வந்து, கோயில் முன் அமைக்கப்பட்டுள்ள குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். ஏப்ரல் 16ம் தேதி காலை 6 மணிக்கு கிடா வெட்டுதல், 9 மணிக்கு அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நிகழ்ச்சி நடைபெறும். திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சுவாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.
அன்று இரவு 7 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடைபெறும். ஏப்ரல் 17ம் தேதி மாலை 3 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.