பணம் பறிக்கும் மர்மநபர்கள்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

பணம் பறிக்கும் மர்மநபர்கள்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

காவல்துறை விசாரணை

தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்கை தொட வேண்டாம் என சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் மர்மநபர்கள் பல்வேறு வகைகளில் மக்களை ஏமாற்றி அவர்களது பணத்தை அபகரித்து வருகின்றனர். சமீப காலமாக வேலூர் மாவட்டத்தில் ஆன்லைன் லிங்க் ஒன்றை அனுப்பி பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்கின்றனர். இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா கூறியதாவது:மர்மநபர்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு வங்கியின் பெயரில் தகவல் ஒன்றை அனுப்பி அதில் பரிசு விழுந்துள்ளதாக தெரிவிப்பார்கள். மேலும் அவர்கள் இணைய லிங் ஒன்றையும் அனுப்பி வைப்பார்கள். அந்த லிங்க்கினை நீங்கள் தொட்டால் உங்களது செல்போனை அவர்கள் ஹேக் செய்து விடுவார்கள். செல்போனில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றை அவர்கள் எடுத்துக் கொண்டு தவறாக பயன்படுத்துவார்கள். வங்கியில் உள்ள பணத்தையும் திருடிவிடுவார்கள். சமீபத்தில் வேலூரை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவருக்கு இந்த லிங்கை மர்மநபர்கள் அனுப்பி உள்ளனர். அவர் அதை கிளிக் செய்துள்ளார். பின்னர் அவரது செல்போனை ஹேக் செய்து அந்த செல்போனில் உள்ள தொடர்பு எண்களுக்கு அதே லிங்கினை அனுப்பி வைத்து பிறரையும் அதை கிளிக் செய்ய வைத்துள்ளனர். இதன் மூலம் பணமோசடி, புகைப்படங்கள் ஆவணங்களை எடுத்தல், வங்கி விவரங்களை எடுத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே செல்போனுக்கு தீபாவளி, பொங்கல் பரிசுகள் தருவதாகவோ, தேர்தல் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றோ, மாணவர் சேர்க்கை மேற்கொள்ளலாம் என்றோ பல பெயர்களில் அந்த லிங்கினை மர்மநபர்கள் பரப்பி வருகின்றனர். எனவே தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்கை தொட வேண்டாம் என அவர் கூறினார்.

Tags

Next Story