மலை கிராமங்களில் சாலை வசதி கோரி 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சித்தேரி மலைப்பகுதிக்குட்பட்ட அரசநத்தம், கலசப்பாடி . கருக்கம்பட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களுக்கு செல்லக்கூடிய மலை பாதை தார் சாலை அமைக்கப்படாமல் காலம் காலமாக மண் சாலையாக உள்ளது. மலைசாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக பெரிய அளவிலான கற்கள் வழித்தடங்களில் உள்ளன. சுமார் 7 கிலோமீட்டர் தொலைவு தூரம் இந்த சாலை உள்ளதால் இங்குள்ள மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் விவசாயம், கல்வி, கர்ப்பிணி பெண்கள், முதியோர், வேலைக்கு செல்வோர் உள்பட அனைத்து பணிகளுக்கும் தீர்வு இல்லாமல் ஒரு கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் 6 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்க மத்திய அரசின் வனம் சுற்றுச்சூழல் காலநிலை மாறுபாடு துறையினர் அனுமதித்த நிலையில் தற்போது வரையில் சாலை அமைக்க பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் நேரத்திற்கு செல்ல முடியாததால் கல்வி பாதிக்கப்படுவதாக தெரிவித்து தங்கள் பகுதிக்கு உடனடியாக சாலை வசதியை ஏற்படுத்தி தரக்கோரி ஏழு கிராமங்களை சேர்ந்த பள்ளிக்குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் சென்னை -சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர், பேச்சுவார்த்தை நடத்திய தங்களின் கோரிக்கை நிறைவேற்றும் வரை சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்து தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.