ஆரம்பாக்கம் அருகே நெடுஞ்சாலையோரம் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு !
காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலை வழியே, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பல்வேறு விதமான பேருந்துகள் மற்றும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நெடுஞ்சாலையோரம் படப்பை அடுத்த, ஆரம்பாக்கம் அருகே, குப்பை அதிக அளவில் குவிந்துள்ளன. படப்பை மற்றும் சாலமங்கலத்தில் உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் குப்பை, உணவு கழிவு, இறைச்சி கழிவுகள், முடி திருத்த கடையில் இருந்து முடி, மூட்டைகளில் கட்டி இரவு நேரங்களில் கொட்டுகின்றனர். இதனால், இப்பகுதியில் ஏற்படும் கடும் துர்நாற்றத்தால் வாகனங்களில் செல்பவர்கள் நோய் தொற்று அபாயத்திற்கு ஆளாகின்றனர். மேலும், இரை தேடி வரும் கால்நடைகள், திடீரென சாலைகளின் குறுக்கே ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நெடுஞ்சாலையோரம் குப்பை கொட்டுவதை தடுத்து, மீறுவோர் மீது தகுந்த நடைவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.