வேகத்தடைக்கு வர்ணம் பூச வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
வேகத்தடை
காஞ்சிபுரம் -செங்கல்பட்டு சாலையில் உள்ளது கன்னிகாபுரம். இங்கிருந்து நத்தப்பேட்டை ரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக நத்தப்பேட்டை, களியனுார், வையாவூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
இச்சாலை வளைவு பகுதியில் வாகன விபத்து ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததாலும், வேகத்தடையின் மீது, இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளதால், இச்சாலையில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் இச்சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்."