பழவேற்காடில் மீனவர் வலையில் சிக்கும் சூரை மீன்களுக்கு கேரளாவில் மவுசு
சூரை மீன்கள்
பழவேற்காடு மீனவ பகுதியில் உள்ள மீனவர்கள் கடல் மற்றும் உவர்ப்பு நீர் ஏரியில் மீன்பிடி தொழில் செய்கின்றனர். கடலில் மீன்பிடிக்க மீனவர்கள், 10 நாட்டிகல் மைல் தொலைவு வரை பைபர் படகுகளில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
ஒவ்வொரு கால நிலைக்கு ஏற்ப பாறை, கவளை, மத்தி, அயிலா, சூரை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் கிடைக்கும். வஞ்சிரம், கிழங்கான், சங்கரா உள்ளிட்டவை குறைந்தளவில் கிடைக்கும். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் வலையில், சூரை மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன.
இவற்றை 1 கிலோ, 120 -150 ரூபாய்க்கு மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற மீன்களை காட்டிலும், இவற்றின் விலை குறைவு என்றாலும், வரத்து அதிகமாக இருப்பதால், மீனவர்களுக்கு ஓரளவிற்கு எதிர்பார்த்த வருவாய் கிடைத்து வருகிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் விரும்பி உண்ணும் மீன் வகைகளில், சூரை மீன் வகையும் ஒன்று என்பதால், அங்கு இதற்கு மவுசு அதிகம். இந்த வகை மீன்களின் தோலை உரித்து வெட்டி எடுக்கும்போது, ஆடு இறைச்சி போன்று இருப்பதால், அங்குள்ளவர்கள் இவற்றை விரும்பி உண்கின்றனர். மீனவர்கள் பிடித்து வரும் சூரை மீன்கள், பெரும்பாலும் கேரள மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளாவில் இவற்றிற்கு நல்ல வரவேற்பு உள்ளதால், மொத்த வியாபாரிகள் மீனவர்களிடம் சூரை மீன்களை வாங்கி, விற்பனைக்கு அனுப்புகின்றனர். தற்போது, பழவேற்காடு மீன் இறங்குதளம் பகுதியில், சூரை மீன்களை படகுகளில் இருந்து இறக்குவது, எடை போடுவது, பதப்படுத்துவது என, தொழிலாளர்கள் பிசியாக இருக்கின்றனர்.