குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்; பொதுமக்கள் அச்சம்
தடாகம் அருகே குடியிருப்பு பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் தடாகம் அருகே திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே-அவுட் பகுதி மேற்கு தொடர்ச்சி மலையின் அருகில் அமைந்துள்ளது.இந்த குடியிருப்பின் அருகில் சமீபகாலமாக கருஞ்சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகின்றது.இந்த கருஞ்சிறுத்தை அப்பகுதியில் உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகின்றது.நேற்று அந்த சிறுத்தை சித்ரா என்பவரின் ஆட்டை கொன்று அருகில் உள்ள மரத்தில் வைத்து சாப்பிட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையில் புகார் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து சிறுத்தையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே சிறுத்தை மரத்தின் மீது அமர்ந்து இருக்கும் காட்சிகளை அப்பகுதி மக்கள் செல்போனில் பதிவு செய்து இருந்தனர்.
அந்த காட்சிகள் தற்போது வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.இதனிடையே வீட்டு விலங்குகளை குறி வைத்து வேட்டையாடி வரும் கருஞ்சிறுத்தையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டுவதுடன் மீண்டும் வனத்தில் இருந்து அவை வெளியே வராதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.