புன்னார்குளத்தில் விதிமுறைகளை மீறி கனரக வாகனங்கள் இயக்கம் - கோரிக்கை
போக்குவரத்து பாதிப்பு
அகில இந்திய மக்கள் நலகழக நிறுவனரும், தலைவருமான டாக்டர் சிவகுமார் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் அழகப்புரத்தை அடுத்த புன்னார்குளத்தில் பழைய கூண்டு பாலத்தை இடித்து அகலமாக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இரு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே புன்னார்குளத்தில் இருந்து மேற்கு நோக்கியும் மற்றும் மயிலாடியில் இருந்து கிழக்காகவும் செல்லலாம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது அறிவிப்பை மீறி, அறிவிப்பு பலகையை தூக்கி எறிந்து விட்டு அவ்வழியாக கனரக வாகனங்கள் (டிப்பர் லாறி) மூலமாக மண் மற்றும் கல் முதலியவற்றை கொண்டு செல்கின்றனர். இதனால் அந்த வழியாக அனுமதிக்கபட்டுள்ள ஆம்புலன்ஸ் உள்ளிட்ட சிறு வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள், அவசரமாக மருத்துவமனைக்கு செல்பவர்கள் உள்பட அனைவரும் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே இந்த அத்துமீறல் செயலில் ஈடுபடும் கனரக வாகனங்கள் மீது பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.